வாழைப்பூ நன்மைகள் மற்றும் வாழைப்பூ துவையல் செய்முறை

           மா, பலா, வாழை என முக்கனிகளின் மகத்துவம் நாம் அறிந்ததே!!! அதிலும் வாழைப்பழம், ஏழைகளின் கனி என்றே சொல்லலாம். வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியுமான வாழைத் தண்டு, பட்டை, இலை, பூ, காய், கனி அனைத்துமே  பயனளிக்கக்கூடியவை. வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் ஆகியவை சத்துக்கள் நிறைந்தது மற்றும் மருத்துவ குணம் மிகுந்தது.


        இந்த வலைப்பதிவில் வாழைப்பூவின் நன்மைகள் பற்றியும் மற்றும் வாழைப்பூ துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.


        வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்ட, அதிகளவில் மருத்துவ குணமுடைய உண்ண தகுந்த பூவாகும். வாரத்தில் இருமுறையாவது நம் உணவுப் பழக்கவழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதன் பயனைப் பெறலாம். 

வாழைப்பூவிலுள்ள சத்துக்கள்:

       வைட்டமின் 'எ', வைட்டமின் 'சி', வைட்டமின் 'இ' போன்றவையும்; பொட்டாசியம், கால்சியம்,  பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற தாதுச்சத்துக்களும்; மேலும் வாாழைப்பூவில் நார்சத்து, புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன.

வாழைப்பூவின் நன்மைகள்:

  • இரத்தத்தில் அதிகளவில் காணப்படும் சர்க்கரையின் அளவை, வாழைப்பூ சாப்பிடுவதனால் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். மேலும் கணையம் வலுப்பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினைச் சுரக்கும். 
  • இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது.
  • பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்றுவலி போன்றவையிலிருந்து விடுபட, பெண்கள் தங்களது  உணவில் வாழைப்பூவை எடுத்துக்கொள்வது நல்லது.
  • கர்பிணி பெண்களுக்கு, காலையில் எழுந்தவுடன் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல், சோர்வு ( Morning Sickness) போன்றவை ஏற்படாமலிருக்க தங்களது  உணவில் வாழைப்பூவை எடுத்துக்கொள்ளாம்.
  • வாழைப்பூவை நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதனால், வாய் துர்நாற்றம், பற்கூச்சம், பற்சொத்தை போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
  • உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிபருப்பு சேர்த்து கடைந்து, நெய் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சூடு குறையும்.
  • வாழைப்பூவுடன் சிறிதளவு நீர் சேர்த்து, சீரகம், மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து, அந்நீரை வடிகட்டி குடிக்க, அஜுரணத்தால் ஏற்படும் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
  • வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சிறிதளவு கலந்து குடிப்பதனால் மூலநோய் குணமாகும். மலச்சிக்கலிருந்தும் விடுபடலாம்.
  • வயிற்றுப்புண், குடற்புண் (stomach ulcer)  உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடுவதனால் விரைவில் குணமாகலாம்.

        வாழைப்பூவைப் பயன்படுத்தி வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ சூப், வாழைப்பூ அடை, வாழைப்பூ துவையல்  என பலவிதமாக சமைத்து சுவைக்கலாம்.
இப்பதிவில் வாழைப்பூ துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

வாழைப்பூ துவையல் செய்ய தேவையானப் பொருட்கள்:
  • வாழைப்பூ
  • உளுந்து பருப்பு      - 1 மேஜை கரண்டி
  • பூண்டு                         - 7 பல்கள்
  • சின்ன வெங்காயம் - 10 
  • மிளகு         - 1 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கேற்ப)
  • புளி - சிறு எலுமிச்சை அளவு
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • கறிவேப்பிலை   - 1 கைப்பிடி
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு  - தேவையான அளவு


தாளிக்க தேவையானப் பொருட்கள்:

  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு   - சிறிதளவு 
  • உளுந்து பருப்பு     - 1  தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு     - 1  தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • வாழைப்பூ துவையல் செய்முறை:
    • வாழைப்பூவின் நடுவிலுள்ள நரம்பை நீக்கி, சுத்தம் செய்து, மோர் அல்லது தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
    • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை,  சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, புளி, வாழைப்பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
    • வாழைப்பூ நன்றாக வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

    • சூடாறியபின் இவற்றை அரைத்து, தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
    • சூடான சாதத்துடன், நெய் மற்றும்   வாழைப்பூ துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


        "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

      No comments:

      Post a Comment