Showing posts with label Healthcare in tamil. Show all posts
Showing posts with label Healthcare in tamil. Show all posts

மூலிகை கசாயம் தயாரிப்பது எப்படி?

        நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பல சமூக தொற்றுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.

இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இயற்கையைப் பேணுவதுதான் சிறந்த வழி.

மூலிகை கசாயம் தயாரிக்கத் தேவையானவை:
  • இஞ்சி  - ஒரு சிறியளவு துண்டு
  • கொத்தமல்லி - 1/2 தே.கரண்டி
  • நுணுக்கிய மிளகு  -  1/4 தே.கரண்டி
  • வெற்றிலை - 3 அல்லது 4

மூலிகை கசாயம் தயாரிப்பது எப்படி?

  • 100மிலி தண்ணீரில் இவற்றையெல்லாம் சேர்த்து கொதிக்க வைத்து 50மிலி அளவு சுண்ட காய்ச்சி, சிறிதளவு பனங்கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து, வடிகட்டி அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சுவாசப் பிரச்சனைகள் நீங்கும்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

உளுந்து கஞ்சி செய்முறை


தேவையானப் பொருட்கள்:
  • வெள்ளை அல்லது கறுப்பு உளுந்து -1கப்
  • வெல்லம்     - 3/4 கப்
  • ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
  • தேங்காய்ப் பால்   - 1/2 கப்
  • தேங்காய்தத் துருவல் - 1/4 கப்
செய்முறை:
  • உளுந்தை நன்றாக நீரில் சுத்தம் செய்து, நீருற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த உளுந்தை நன்கு மைப் போல அரைத்து,  அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி, மிதமானத் தீயில் காய்ச்சவும்.( சிறிதளவு குடிநீர் அல்லது உளுந்து ஊற வைத்த நீர் சேர்த்துக்கொள்ளவும்).
  • உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை இடைவிடாமல் கிளற வேண்டும்.
  • பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். 
  • ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக தேங்காய்தத் துருவல் சேர்க்க வேண்டும்.
  • இப்போது சூடான,  சுவையான,  ஆரோக்கியமான உளுந்து கஞ்சி தயார்.
  • அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.



     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

அல்சர், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய பழம் 'முலாம் பழம்'.

       பழங்கள் என்றாலே நமது நினைவிற்கு முதலில் தோன்றுவது 'ஆப்பிள்'. மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழங்களை நாம் கூறுவதே இல்லை. அதிக விலையுள்ள பழங்களைக்காட்டிலும், விலை குறைவாக உள்ள பழங்களில் ஊட்டச்சத்துக்கள் ஏராளம்.





அவ்வாறு விலை குறைந்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் பழத்தைப்பற்றி தான் இந்த வலைப்பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.


முலாம் பழம் ( Musk melon):

கோடை காலத்தில் அதிகளவில் கிடைக்கக்கூடிய பழவகைகளுள் ஒன்று முலாம்பழம். 

முலாம்பழத்தில், வைட்டமின் 'ஏ', 'பி', 'சி' ;  பாஸ்பரஸ், பொட்டாசியம்,  மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற தாதுச்சத்துகளும்; ஆக்சாலிக் அமிலம் போன்றவைகளும் நிறைந்துள்ளன.


முலாம் பழம் உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகள்:

  • அல்சர், அஜிரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், எதிர்கழித்து வருதல், புளித்த ஏப்பம், வயிறு வலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்து எதுவெனில் முலாம் பழம். இவ்வாறான பிரச்சனைகள் உள்ளவர்கள் முலாம் பழத்தை உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் (Cup) அளவிற்கு தினமும் இருவேளையாவது எடுத்துக்கொள்ளாம். முலாம் பழத்தை சாப்பிட்டு சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு நீர் பருகவும். இவ்வாறு தொடர்ந்து  முலாம் பழத்தை சாப்பிட்டுவர மேற்கூறிய அனைத்துப் பிரச்சனையிலிருந்தும் எவ்வித மருத்துவ செலவின்றி விடுபடலாம்.
  • கல்லீரல் தொடர்பான பிரச்சனை, சிறுநீரக கோளாறு, சிறுநீரக வியாதி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வுகாண முலாம் பழம் சாப்பிடலாம்.





  • நீண்ட நாட்களாக மலச்சிக்கல் (Constipation) பிரச்சனை உள்ளவர்கள், முலாம் பழத்தை தனது அன்றாட உணவுப் பழக்கத்தில் தொடர்ந்து சாப்பிட்டுவர இம்மாதிரியான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் முலாம் பழம் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.
  • உடல் உஷ்ணத்தைத் தணிக்க முலாம் பழம் சிறந்தது. 
  • இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமலிருக்க, முலாம் பழம் சாப்பிடலாம்.
  • முலாம் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு "நுரையீரல் புற்றுநோய்" ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
  • மது அருந்துவதினால் ஏற்படக்கூடிய வயிற்றுப்புண்( Ulcer) குணமாக முலாம் பழம் சிறந்தது.
  • உடலில் உள்ள பித்தத்தை வெளியேற்ற முலாம் பழம் ஓர் எளிய மருந்து.
  • முலாம் பழத்தை சாப்பிடுவதனால் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  • கர்ப்பிணிப் பெண்கள் முலாம் பழம் சாப்பிடலாம். இதனால் குழந்தையின்  முதுகெலும்பு மற்றும் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
  • முலாம் பழம் நீர்வேட்கையை தணித்து, உடலுக்கு புத்துணர்வு அளிக்கக் கூடியது.

முலாம் பழம் -- எவ்வாறு சாப்பிடலாம்?
  • நன்கு கனிந்த சதைப்பற்றான முலாம் பழத்தை அப்படியே சாப்பிடலாம்.
  • முலாம் பழத்தின் சதைப்பகுதியை அரைத்து, அதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
  • முலாம் பழத்தின் சதைப்பகுதியை அரைத்து, அதனுடன்  காய்ச்சிய பால், தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, குழந்தைகளுக்கு முலாம் பழம் மில்க்சேக் (Milk shake) செய்து கொடுக்கலாம்.
  • கோடை காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்றப் பிரச்சனைகளுக்கு, முலாம் பழத்தின் சதைப்பகுதியை அரைத்து, அதனுடன் சிறிதளவு சீரகத்தூள், சிறிதளவு சுக்குத்தூள், தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.


குறிப்பு:
  • முலாம் பழம் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதென்பதால் குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு இப்பபழத்தைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.





  • ஆஸ்துமா, மூச்சிரைப்பு உள்ளவர்கள் முலாம் பழத்தை சாப்பிட வேண்டாம்.
  • மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற வாதப் பிரச்சனை உள்ளவர்கள் முலாம் பழத்தை தவிர்க்க வேண்டும்.


"நலமுடன் வாழ்வோம்;  
தமிழ் போல் வளர்வோம்."

    மூட்டுவலி நீக்கும் முடக்கறுத்தான் கீரை(முடக்கற்றான் கீரை) மற்றும் முடக்கறுத்தான் கீரையின் பயன்கள்

    "சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்    கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு  முடக்கற்றான் தனை மொழி."

                           -- சித்தர் பாடல்


    அன்றே சித்தர்கள் முடக்கறுத்தான் கீரையின் பயனைப் பற்றி தன் பாடல் வரிகளின் வழியாக, இந்த உலகிற்கு கூறியுள்ளார்கள்.






    ஏறு கொடி வகையை சார்ந்தது  இந்த முடக்கறுத்தான் கீரை. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதினால், இந்த மூலிகை முடக்கறுத்தான் கீரை எனப் பெயர் பெற்றது. தற்போதோ! காலப்போக்கில் பேச்சு வழக்கில் மருவி முடக்கத்தான் கீரை என மாறிற்று....

    பொதுவாக கிராமப்புறங்களில் மழைக்காலங்களில் மிக எளிதாக கிடைக்கும் கீரை வகை. முடக்கறுத்தான் கீரை ஏராளமான மருத்துக் குணங்களைக் கொண்டது. 






    இன்றைய நவீன இயந்திர உலகில், வேலைப்பளு; நேரமின்மை போன்ற பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளினால், சிறுநீர் கழிப்பதற்குக்கூட நேரமில்லாமல், சிறுநீர் வெளியேற்றுவதை நீண்ட நேரம் அடக்கிக்கொள்கிறோம். இவ்வாறு நாம் செய்வதனால், நாம் நம் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். இதனால் சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட வேண்டிய யூரிக் ஆசிட் வெளியேற இயலாமல், உடலின் பிற பகுதிகளுக்கு செல்கிறது. இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ்( Uric acid crystals)  மூட்டுகளில் படிந்துவிடுகிறது. இவ்வாறு பல வருடங்களாக படிந்து தங்கிவிடுகிறது. இதனால் இளம் வயதிலேயே மூட்டு, இடுப்பு, பாதம்  போன்றப் பகுதிகளில் அதிக வலி ஏற்பட்டு  ஆர்த்தரிட்டிஸ் (Arthritis) எனும் மூட்டுவலி நோயின் ஆரம்ப நிலையாகிறது.

    முடக்கறுத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் தன்மைக் கொண்டது. 

    முடக்கறுத்தான் கீரையை நம் அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் எடுத்துக்கொள்ளும் போது, மூட்டுவலி; கீல்வாதம்; கீல் பிடிப்பு; கால்களை நீட்ட, மடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.


    முடக்கறுத்தான் கீரையிலுள்ள சத்துக்கள்:

    முடக்கறுத்தான் கீரையில் நார்ச்சத்து,  கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம்,  புரதம் போன்ற பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியவை. மேலும் முடக்கறுத்தான் கீரை ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் (Antioxidants) உள்ளது.





    முடக்கறுத்தான் கீரை உணவு வகைகள்:

    முடக்கறுத்தான் கீரை தோசை; முடக்கறுத்தான் கீரை சூப்; முடக்கறுத்தான் கீரைப் பொறியல்; முடக்கறுத்தான் கீரை துவையல் போன்றவற்றை,  முடக்கறுத்தான் கீரையைப் பயன்படுத்தி செய்யலாம்.


    முடக்கறுத்தான் கீரைப் பயன்கள்:

    • முடக்கறுத்தான் கீரையை விளக்கெண்ணெய்யில் வதக்கி, அந்த எண்ணெய்யை மூட்டுவலிக்கு தடவி கொள்ளலாம்.
    • மலச்சிக்கல், மூல நோய், வாய்வு பிரச்சனைப் போன்றவைகளுக்கு முடக்கறுத்தான் கீரை சிறந்தது.
    • மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கும் முடக்கறுத்தான் கீரை நல்லது.
    • முதுகெலும்பு தேய்மானம்,  மூட்டு தேய்மானம்,  மூட்டுவலி போன்ற தொந்தரவு உள்ளவர்கள் முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
    • தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்த, இக்கீரையை நன்றாக அரைத்து, தலை முழுவதும் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் பிறகு, தலைமுடியை அலசவும்.


        "நலமுடன் வாழ்வோம்; 

      தமிழ் போல் வளர்வோம்."



    புற்றுநோய் வராமல் காக்கும் உலர் திராட்சையின் நன்மைகள்

                  அனைவருக்கும் விருப்பமான பழவகைககளுள் ஒன்று திராட்சை. உயர்தரமான திராட்சை பழங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். அவ்வாறு பதப்படுத்தப்பட்ட திராட்சையில் சத்துக்கள் ஏராளம்.  

             உலர் திராட்சை பச்சை, கருப்பு மற்றும் கோல்டன் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கின்றது. விதைகளுடன் கிடைக்கும் உலர் திராட்சை வகையை பயன்படுத்துவது சிறந்தது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட வகைகளை தவிர்ப்பது நல்லது. 

       நமது உணவு பழக்கவழக்கத்தில் அனைத்து வகையான இனிப்பு உணவிலும் உலர் திராட்சை சேர்க்கப்படுகிறது. அத்தகைய உலர் திராட்சையின் நன்மைகளை இந்த வலைப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.


    உலர் திராட்சையில் உள்ள சத்துக்கள்:

              உலர் திராட்சையில் இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், வைட்டமின்கள் 'ஏ'; பி' ; 'சி', ஃபோலிக் ஆசிட், கரோட்டீன்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.


    உலர் திராட்சையின் பயன்கள்:

    •  10 உலர் திராட்சைகளை ஒரு டம்ளர்  நீரில் (அல்லது பசும்பாலில்) போட்டு கொதிக்க வைத்து, இறக்கி, நன்றாக மசித்து, சாறெடுத்து, தேவைப்பட்டால் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல்களிலிருந்து விடுபடலாம். குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் ஏற்படும் காலங்களில் இவற்றைக் கொடுக்கலாம்.
    • இரவில் தூங்க செல்வதற்கு முன் உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்தசோகையிலிருந்து விடுபட்டு, உடற்சோர்வை நீக்கலாம்.
    • கேட்சிங் என்ற மூலப்பொருள் உலர் திராட்சையில் உள்ளதால், இது புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டது. அதனால் நம்மை புற்று நோயிலிருந்து காத்துக்கொள்ள கருப்பு நிற உலர் திராட்சையை சாப்பிடுவது சிறந்தது.
    • உலர் திராட்சையை சாப்பிடுவதனால், முதுமை தோற்றம், தோல் சுருக்கம் போன்றவைகளை நீக்கி, இளமையை தக்க வைத்துக்கொள்ளலாம்.
    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உலர் திராட்சையை சாப்பிடலாம்.
    • ஆண்களின் விந்தணு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உலர் திராட்சை இருக்கின்றது.
    • சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய் தொற்று ஏற்படின்,  அதை குணமாக்க ஆயுர் வேதம் பரிந்துரைப்பது உலர் திராட்சையை தான்.


         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    தலை முடியைப் பராமரிக்க, ஆரோக்கியமான ஒரு தலை குளியல் கலவை(Hair Pack) தயாரிப்பது எப்படி?

          ஷாம்பு(shampoo) என்பது நமது தலை முடி பராமரிப்பில் ஒரு அடிப்படை மற்றும் அவசியமான ஒன்று. ஆனால், அதில் உள்ளதைப் பற்றிய அறிவை யாரும் தெரிந்திருக்கவில்லை. பல உணவுப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் உள்ளன என்பதையும் நாம் அறிந்திருக்கலாம். இதேபோல், நம் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களில்(Personal Care Products)  நம் உடலுக்கு அபாயகரமான நச்சுப் பொருட்களும் உள்ளன.

     இந்த அழகுசாதனப் பொருட்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நீங்கள் சூடான குளியல் எடுக்கும்போது, ​​உங்கள் தோலில் உள்ள துளைகள் நன்கு திறந்திருக்கும் போது மிகவும் எளிதாக உங்கள் உடலில் நுழையும். இந்த நச்சு (தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்) உங்கள் இரத்த ஓட்டத்தில் நேரடியாக நுழைகின்றன. ஆனால் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் நமக்கு ஒருபோதும் ஆபத்தைத் தராது.


    தலை முடியைப் பராமரிக்க, ஆரோக்கியமான ஒரு தலை குளியல் கலவை(Hair Pack) தயாரிப்பது எப்படி?

    தேவையானப் பொருட்கள்:

    • ஊறவைத்த பாசிப்பயறு  - 3 டேபிள் ஸ்பூன்
    • ஊறவைத்த வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
    • கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    • சின்ன வெங்காயம் - 5 முதல் 10 
    • நெல்லிக்காய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    • தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    • செம்பருத்தி  இலைகள் - 1 கைப்பிடி
    • செம்பருத்திப் பூக்கள் - 1 கைப்பிடி
    • கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்


    தலை குளியல் கலவையின்(Hair Pack) பயன்கள்:

    • பாசிப்பயறு புரதங்கள் நிறைந்தவை மற்றும் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
    • வெந்தயம் பொடுகை கட்டுப்படுத்துகிறது.
    • கறிவேப்பிலை இளநரை முடி வராமல் தடுக்கவும் மற்றும் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.
    • செம்பருத்தி இலைகள் மற்றும்  செம்பருத்தி பூக்கள் முடி வளர்ச்சியைத் தூண்டும்.
    • கற்றாழை சேதமடைந்த மற்றும் பிளவுபட்ட முடியை முனைகளில் சரிசெய்து முடியை அடர்த்தியாக்குகிறது.
    • நெல்லிக்காய் தூள் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவுகிறது.
    • தயிர்,  பொடுகு வராமலிருக்க உதவுகிறது.

    தலை குளியல் கலவை(Hair Pack) தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை:
    • தேவையானப் பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
    •  உங்கள் உச்சந்தலையில் மற்றும் தலை முழுவதும் இந்த கலவையை தடவவும்.
    • இதை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும், பின்னர் உங்கள் தலைமுடியை அலசவும்.




         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    பிரண்டை இட்லி பொடி செய்வது எப்படி?

           பிரண்டைக்கு 'வஜ்ஜிரவல்லி' என்ற பெயரும் உண்டு. பிரண்டை என்னும் கொடி வகை தாவரம் பல வகைகளில் வளரக்கூடியதாகும். அதாவது சாதாரணப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, தட்டைப்பிரண்டை (சதுரப்பிரண்டை), முப்பிரண்டை, சிவப்பு பிரண்டை, தீம்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைகளில் வளரக்கூடியது. பிரண்டை பல வகைகளில் காணப்பட்டாலும், நான்கு பட்டைகளை உடைய சாதாரணப் பிரண்டையே பெரும்பாலும் கிடைக்கிறது.

    பெரும்பாலும் பிரண்டையின் தண்டு பகுதி மற்றும் வேர் பகுதிகளே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த வலைப்பதிவில் நாம் பிரண்டையைப் பயன்படுத்தி இட்லி பொடி எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.




    பிரண்டை இட்லி பொடி செய்ய தேவையானப் பொருட்கள்:

    • பிரண்டை    - 1 கட்டு
    • கடலைப் பருப்பு  - 1 கப்
    • உளுந்துப் பருப்பு - 1 கப்
    • மிளகாய் வற்றல் - 1 கப் (காரத்திற்கேற்ப)
    • பூண்டு   - 10 பல்கள் 
    • கறிவேப்பிலை - 1/2 கப்
    • புளி - நெல்லிக்காய் அளவு
    • பெருங்காயம் - சிறிதளவு 
    • உப்பு  - தேவையான அளவு
    • நல்லெண்ணெய் 





    பிரண்டை இட்லி பொடி செய்முறை:
    • பிரண்டையை தோல் நீக்கி; நார் அகற்றி; சுத்தம் செய்து; சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். (பிரண்டையின் சாறு  அரிப்பையும், நமைச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், சுத்தம் செய்யும்முன் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்).
    • ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் சுத்தம் செய்த பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டை எண்ணெய்யை இழுக்காது. பிரண்டையை வதக்கியப்பின் அந்த எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை மூட்டு வலிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • அதே கடாயில், மேலே கொடுக்கப்பட்டுள்ள கடலைப் பருப்பு,  உளுந்துப் பருப்பு,  மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, புளி , பூண்டு ஆகியவற்றை மிதமான தீயில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
    • சூடு ஆறிய பின் , பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.


    • ஆரோக்கியமான பிரண்டை இட்லி பொடி தயார்.

    மேலும் பிரண்டையின் மருத்துவ குணம் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள Link-யை Click செய்யவும்.

         "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    எலும்பை வலுவாக்கும் பிரண்டை; பிரண்டையின் நன்மைகள் மற்றும் பிரண்டை துவையல் செய்முறை

         பிரண்டை, வெப்பமான பகுதிகளில், மனித நடமாட்டம் குறைவாக காணப்படும் காடுகளில் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய கொடி வகையை சார்ந்த தாவரமாகும்.




           இந்தியா மற்றும் இலங்கையில் அதிகளவில் காணப்படும் மருத்துவ குணமிகுந்த மூலிகை தாவரம். பிரண்டைக்கு 'வஜ்ஜிரவல்லி' என்ற பெயரும் உண்டு. பிரண்டை என்னும் கொடி வகை தாவரம் பல வகைகளில் வளரக்கூடியதாகும். அதாவது சாதாரணப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, தட்டைப்பிரண்டை (சதுரப்பிரண்டை), முப்பிரண்டை, சிவப்பு பிரண்டை, தீம்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைகளில் வளரக்கூடியது. பிரண்டை பல வகைகளில் காணப்பட்டாலும், நான்கு பட்டைகளை உடைய சாதாரணப் பிரண்டையே பெரும்பாலும் கிடைக்கிறது. 

           பிரண்டையின் சாறு நம் உடலில்பட்டால்  அரிப்பையும், நமைச்சலையும் ஏற்படுத்தக்கூடியது. இதன் சாறு, உலகத்தில் கடினமானப் பொருள் என்று கருதப்படும் வைரத்தின் கார்பன் பிணைப்பையும் துகளாக்கும் என்று அன்றே சித்தர் பெருமான் "போகர்" கூறியுள்ளார். 

           பெரும்பாலும் பிரண்டையின் தண்டு பகுதி மற்றும் வேர் பகுதிகளே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

      பிரண்டையில் கால்சியம், வைட்டமின் 'சி' போன்ற சத்துக்கள் மிகுதியாக உள்ளன.




    பிரண்டையின் நன்மைகள்:

    • பிரண்டையில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், எலும்பு முறிவு; மூட்டுவலி; மூட்டு வீக்கம்; சுளுக்கு போன்ற எலும்பு மற்றும் நரம்பு தொடர்பானப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண நாம் நம் அன்றாட உணவுப் பழக்கவழக்கத்தில் பிரண்டையை சேர்த்துக்கொள்ளலாம். 
    • பற்களை பலப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவை நிறுத்த பிரண்டை உதவுகிறது.
    • முதுகுவலி, கழுத்துவலியினால் சிரமப்படுபவர்கள் பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்ளாம்.
    • மூலநோய்; மலத்துடன் இரத்தம் கசிதல்; மலத்துவாரத்தில் அரிப்பு; அஜீரணக் கோளாறு ஆகியவற்றிலிருந்து குணமடைய, பிரண்டையை சுத்தம் செய்து, நெய்விட்டு வதக்கி, அரைத்து, காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவந்தால் நல்லப் பலன் காணலாம்.
    • இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதினால், இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும். இதயத்தில்  இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தைப் பலப்படுத்த பிரண்டை துணைப்புரிகிறது.
    • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள்; கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு பிரண்டை ஒரு நல்மருந்து.
    • பிரண்டை, வயிற்றுப் பொருமலை நீக்கி; பசியைத் தூண்டக்கூடியது.

    பிரண்டை துவையல் செய்முறை:

    தேவையானப் பொருள்கள்:
    • பிரண்டை - 1 கட்டு
    • உளுந்து பருப்பு   - 1 மேஜைக் கரண்டி
    • கடலைப் பருப்பு   - 1 மேஜைக் கரண்டி
    • மிளகாய் வற்றல் - 3 (காரத்திற்கேற்ப)
    • சின்ன வெங்காயம் - 7
    • பூண்டு - 3 பல்கள்
    • புளி - சிறிதளவு
    • கறிவேப்பிலை - 1 கைப்பிடி 
    • தேங்காய் துருவல் - 1 கைப்பிடி 
    • உப்பு 
    • நல்லெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி

    தாளிக்க தேவையானப் பொருட்கள்:

  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு   - சிறிதளவு 
  • உளுந்து பருப்பு     - 1  தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு     - 1  தேக்கரண்டி
  • கறிவேப்பிலை    

  • பிரண்டை துவையல் செய்முறை:
    • பிரண்டையை தோல் நீக்கி; நார் அகற்றி; சுத்தம் செய்து; சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். (பிரண்டையின் சாறு  அரிப்பையும், நமைச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், சுத்தம் செய்யும்முன் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்).
    • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை,  சின்ன வெங்காயம், பூண்டு, புளி, பிரண்டை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
    • சூடாறியபின் இவற்றை அரைத்து, தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
    • சூடான சாதத்துடன், நெய் மற்றும் பிரண்டை துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
    • இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைக்கும் எடுத்துக்கொள்ளலாம்.
    மேலும் பிரண்டையைப் பயன்படுத்தி பிரண்டைத் தொக்கு; பிரண்டை இரசம்; பிரண்டை காரக்கொழம்பு ; பிரண்டைப் பொடி செய்யலாம்.

        "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

    வாழைப்பூ நன்மைகள் மற்றும் வாழைப்பூ துவையல் செய்முறை

               மா, பலா, வாழை என முக்கனிகளின் மகத்துவம் நாம் அறிந்ததே!!! அதிலும் வாழைப்பழம், ஏழைகளின் கனி என்றே சொல்லலாம். வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியுமான வாழைத் தண்டு, பட்டை, இலை, பூ, காய், கனி அனைத்துமே  பயனளிக்கக்கூடியவை. வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் ஆகியவை சத்துக்கள் நிறைந்தது மற்றும் மருத்துவ குணம் மிகுந்தது.


            இந்த வலைப்பதிவில் வாழைப்பூவின் நன்மைகள் பற்றியும் மற்றும் வாழைப்பூ துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.


            வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்ட, அதிகளவில் மருத்துவ குணமுடைய உண்ண தகுந்த பூவாகும். வாரத்தில் இருமுறையாவது நம் உணவுப் பழக்கவழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதன் பயனைப் பெறலாம். 

    வாழைப்பூவிலுள்ள சத்துக்கள்:

           வைட்டமின் 'எ', வைட்டமின் 'சி', வைட்டமின் 'இ' போன்றவையும்; பொட்டாசியம், கால்சியம்,  பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற தாதுச்சத்துக்களும்; மேலும் வாாழைப்பூவில் நார்சத்து, புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன.

    வாழைப்பூவின் நன்மைகள்:

    • இரத்தத்தில் அதிகளவில் காணப்படும் சர்க்கரையின் அளவை, வாழைப்பூ சாப்பிடுவதனால் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும். மேலும் கணையம் வலுப்பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினைச் சுரக்கும். 
    • இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது.
    • பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்றுவலி போன்றவையிலிருந்து விடுபட, பெண்கள் தங்களது  உணவில் வாழைப்பூவை எடுத்துக்கொள்வது நல்லது.
    • கர்பிணி பெண்களுக்கு, காலையில் எழுந்தவுடன் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல், சோர்வு ( Morning Sickness) போன்றவை ஏற்படாமலிருக்க தங்களது  உணவில் வாழைப்பூவை எடுத்துக்கொள்ளாம்.
    • வாழைப்பூவை நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதனால், வாய் துர்நாற்றம், பற்கூச்சம், பற்சொத்தை போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
    • உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிபருப்பு சேர்த்து கடைந்து, நெய் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சூடு குறையும்.
    • வாழைப்பூவுடன் சிறிதளவு நீர் சேர்த்து, சீரகம், மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து, அந்நீரை வடிகட்டி குடிக்க, அஜுரணத்தால் ஏற்படும் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
    • வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சிறிதளவு கலந்து குடிப்பதனால் மூலநோய் குணமாகும். மலச்சிக்கலிருந்தும் விடுபடலாம்.
    • வயிற்றுப்புண், குடற்புண் (stomach ulcer)  உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடுவதனால் விரைவில் குணமாகலாம்.

            வாழைப்பூவைப் பயன்படுத்தி வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ சூப், வாழைப்பூ அடை, வாழைப்பூ துவையல்  என பலவிதமாக சமைத்து சுவைக்கலாம்.
    இப்பதிவில் வாழைப்பூ துவையல் எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

    வாழைப்பூ துவையல் செய்ய தேவையானப் பொருட்கள்:
    • வாழைப்பூ
    • உளுந்து பருப்பு      - 1 மேஜை கரண்டி
    • பூண்டு                         - 7 பல்கள்
    • சின்ன வெங்காயம் - 10 
    • மிளகு         - 1 தேக்கரண்டி
    • மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கேற்ப)
    • புளி - சிறு எலுமிச்சை அளவு
    • தேங்காய் துருவல் - 1/2 கப்
    • கறிவேப்பிலை   - 1 கைப்பிடி
    • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
    • உப்பு  - தேவையான அளவு


    தாளிக்க தேவையானப் பொருட்கள்:

  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு   - சிறிதளவு 
  • உளுந்து பருப்பு     - 1  தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு     - 1  தேக்கரண்டி
  • கறிவேப்பிலை
  • வாழைப்பூ துவையல் செய்முறை:
    • வாழைப்பூவின் நடுவிலுள்ள நரம்பை நீக்கி, சுத்தம் செய்து, மோர் அல்லது தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
    • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை,  சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, புளி, வாழைப்பூ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
    • வாழைப்பூ நன்றாக வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

    • சூடாறியபின் இவற்றை அரைத்து, தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
    • சூடான சாதத்துடன், நெய் மற்றும்   வாழைப்பூ துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


        "நலமுடன் வாழ்வோம்; 
      தமிழ் போல் வளர்வோம்."

      இளநரை முடி கறுப்பாக மாற 'இயற்கை முடிச்சாயம்( Natural Hair Dye) தயாரிப்பது எப்படி?

      இளநரை முடி ஏற்படுவதற்கானக் காரணங்கள்:

               மரபணுக்களின் மூலம் ஏற்படக்கூடிய இளநரை, வைட்டமின் B-12 குறைவு, தைராய்டு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு(Hormone imbalance), பிட்யூட்டரி சுரப்பி சரியாக செயல்படாமல் இருத்தல்,  அயோடின் குறைபாடு, இரத்தசோகை; புரதம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு, அதிகமான மனஉளைச்சல்(Tension), சரியான சரிவிகித உணவுமுறை இல்லாமை,ஹைட்ரஜன் ஃப்ராக்ஸைடு உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக வேதிப்பொருட்கள்  கலந்த ஷாம்பு பயன்படுத்துவது; புகைப்பழக்கம், மதுப்பழக்கம்; துரித உணவுப்பழக்கம்(Junk food) இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நமக்கு இளநரை என்பது ஏற்படுகின்றது.

      அதிகளவு அமோனியா போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்ற செயற்கை சாயங்கள்( Hair dye) நமக்கு பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

      1. தோலிற்கு ஒவ்வாமையை(skin Allergy)        ஏற்படுத்துகிறது. 
      2. கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
      3. தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
      4. சில ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகிறார்கள்.
      இதுபோன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் இவ்விதமான செயற்கை சாயங்கள்( Hair dye) நமக்கு தேவையா?

      இயற்கை முடிச்சாயம் தயாரிப்பது எப்படி?

      தேவையானப் பொருட்கள்:
      • கருந்துளசி பொடி
      • கருவேப்பிலை பொடி
      • மருதாணி பொடி
      • நெல்லிக்காய் பொடி
      • அவுரி பொடி
      • செம்பருத்தி பொடி
      • கடுக்காய் பொடி
      • காபித்தூள் வடிநீர் (Coffee powder decoction) -- 3 தேக்கரண்டி 

      செய்முறை:
      • ஒரு இரும்புப் பாத்திரத்தில் இப்பொடி வகைகளைச் சேர்த்து நன்றாக கலந்தபின், காபித்தூள் வடிநீரை சேர்த்து பசை போன்ற பதத்திற்கு தயாரித்து மூடி வைத்து, 12 மணிநேரம் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் தலையில் தடவி குறைந்தது 3 மணிநேரமாவது ஊறவிடவும்.
      • இளம்சூடான வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.
      • இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தும் போது நாம் நல்லப் பலனைப் பெறலாம்.
      • இளநரை கறுப்பாக மாறும்.

           "நலமுடன் வாழ்வோம்; 
        தமிழ் போல் வளர்வோம்."

      நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய், அதன் பயன்கள் மற்றும் நெல்லிக்காய் ஜுஸ்

               " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற நியதிக்கு மாறாக, இவ்வுலகை இயக்குகிறது மனித இனம். நமது சுற்றுப்புறத்தில் உள்ள பல விதமான நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


             இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம் "நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி." நெல்லிக்காய், அறுசுவைகளில் கரிப்புத்தன்மை தவிர மற்ற ஐந்து சுவைகளான இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு உள்ள மருத்துவக்குணமிக்க ஒரு காய் அல்லது கனி ஆகும்.


      நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்:

            வைட்டமின் 'சி', வைட்டமின் 'ஏ',கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற தாதுக்கள், அமினோ அமிலங்கள், 80% நீர்ச்சத்து அடங்கியுள்ளன.

      நெல்லிக்காய் பயன்கள்:

      • நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரக்கூடிய அனைத்து வகையான சத்துக்களும்  நெல்லிக்காயில் உள்ளது.
      • நம்மையும், நமது உடல் உறுப்புகளையும் புத்துணர்வுடனும், என்றும் இளமையுடனும் வைத்திருக்கவும், சருமப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
      • நெல்லிக்காயை அடிக்கடி நமது உணவுப்பழக்க வழக்கத்தில் எடுத்துக்கொள்ளும் போது, இதயத்தில் ஏற்படும் அடைப்பு, இரத்தம் உறைதல் போன்றவைகளைத் தடுக்கிறது. மேலும் இதயம் தொடர்பானப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
      • முகம் பொலிவு பெறவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் நெல்லிக்காய் நல்ல பலனைத் தரும்.
      • நெல்லிக்காயில் அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், நமது உடலில் எலும்புகள் வலுவடைய, வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிடலாம்.
      • இன்றையக் காலக்கட்டத்தில் கலப்படமற்ற தரமான உணவு கிடைப்பது அரிதான ஒன்று. நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி நமது உடலுக்கு நன்மை செய்யும் உறுப்பு 'கல்லீரல்'. கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும், அதன் வேலையை சிறப்பாக செய்யவும், கல்லீரலில் கிருமித் தொற்றால் ஏற்படும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் நெல்லிக்காய் உதவுகிறது. 
      • நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால், நமது இரத்ததில் உள்ள நச்சுக் கழிவுகளை வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
      • பித்தப்பைக் கற்கள், சிறுநீரக கற்கள் நீங்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
      • நெல்லிக்காய் சாப்பிடுவதால், வயிற்றுப் புண்கள், அஜீரணக் கோளாறுகள் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கலாம்.
      • நெல்லிக்காயில் உள்ள இரசாயனங்கள் புற்று நோய் செல்களை வளரவிடாமல் தடுத்து, புற்று நோய் வராமல் தடுக்கிறது.
      • நமது உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளை அகற்றி, உடல் எடையைக் குறைக்க நெல்லிக்காய் சாப்பிடலாம்.
      • கண்பார்வை அதிகரிக்க, தெளிவு பெற நெல்லிக்காய் உதவுகிறது. 
      நெல்லிக்காயை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்?:
      • குழந்தைகளுக்கு, நெல்லிக்காயை சிறு சிறு மெல்லிய துண்டுகளாக நறுக்கி அதனை சிறிதளவு தேனில் ஊற வைத்துக் கொடுப்பதனால், அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தலாம்.
      • குழந்தைகளுக்கு, நெல்லிக்காய்களை நன்றாக துருவி, மாங்காய் சாதம், தேங்காய் சாதம் போல் நெல்லிக்காய் சாதம் செய்து தரலாம்.
      • நெல்லிக்காய் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கலாம்.
      நெல்லிக்காய் சாறு(ஜுஸ்) செய்முறை:

      தேவையானப் பொருட்கள்:
      1. நெல்லிக்காய் - 3
      2. சீரகம்  - 1/4 தேக்கரண்டி
      3. மிளகு  -  1/4 தேக்கரண்டி
      4. இஞ்சி - சிறு துண்டு (1/4)
      5. பச்சைமிளகாய் - சிறு துண்டு (1/4)
      6. கறிவேப்பிலை - சிறிதளவு
      7. புதினா இலைகள் - சிறிதளவு

      செய்முறை:
      • மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தேவையென்றால் தேன் கலந்து பருகலாம்.


      குறிப்பு:
      • நெல்லிக்காய் ஊறுகாய் செய்து சாப்பிடுவதனால், அதன் 10% பலனை மட்டும்தான் பெறமுடியும்.
      • நெல்லிக்காயை அப்படியே மென்று சாப்பிடும்போது அதன் முழுப்பலனைப் பெறலாம்.

           "நலமுடன் வாழ்வோம்; 
        தமிழ் போல் வளர்வோம்."


      சளி தொந்தரவு நீக்கும் தூதுவளை பயன்கள், தூதுவளை ரசம் செய்முறை மற்றும் தூதுவளை துவையல்

            கற்பக மூலிகைகளில் ஒன்று தூதுவளை. இந்த கொடி வகை தாவரம், ஈரம் நிறைந்த செழிப்பான இடங்களில், வேலிகள் அல்லது மற்ற செடிகளைப் பற்றி படர்ந்து, புதர் போல வளரும் தாவரமாகும். இத்தாவரத்தில், சிறு சிறு வளைந்த முட்கள், கரும்பச்சை நிற இலைகள், ஊதா நிறப் பூக்கள், உருண்டை வடிவத்தில் சிவப்பு நிற பழங்கள் காணப்படும்.


                இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, அளர்க்கம், சிங்கவல்லி என பல பெயர்கள் உள்ளது. இலை, பூ, காய், கனி, வேர் என இத்தாவரத்தின் அனைத்துப் பகுதியும் மருத்துவப் பயன்கள் கொண்டது. தூதுவளையைப் பயன்படுத்தும் முன்பே, இதன் முட்களை நீக்க வேண்டியது அவசியமானதாகும். ஏனென்றால் முட்கள் இருக்கும் செடிகள் சற்று நச்சுத் தன்மை கொண்டவையாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட தூதுவளைத் தாவரம்,  ஓர் காய கற்பக மூலிகையாகும்.

      தூதுவளைப் பயன்கள்:
      • தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவில் உள்ளதால் எலும்பையும், பற்களையும் வலுப்படுத்தும்.
      • தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி, காலை மற்றும் மாலை என இரு வேளையும் சிறிதளவு தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டுவர, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதுடன், இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுப்பெறும்.
      • தூதுவளையை மிளகுடன் சேர்த்து சாப்பிட்டுவர வாதம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தலாம்.
      • தூதுவளை மூளையில் உள்ள செல்களைத் தூண்டி நினைவாற்றல் பெருக உதவுகிறது.
      • சளி, இருமல், இரைப்பு, சுவாச நோய்கள் நீங்க தூதுவளை நல்ல மருந்தாகும்.
      • தூதுவளை பொடியயை மோரில் கலந்து சாப்பிட , இரத்த சோகை நீங்கி, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகமாகும்.
      • தூதுவளை பொடியயை பாலில் கலந்து சாப்பிட, பித்தத்தால் ஏற்படும் தலைவலி, மயக்கம் போன்றவைக்கு தீர்வு காணலாம்.
      தூதுவளை ரசம்:
            சளி,  இருமல் நீங்க தூதுவளை ரசம் நல்ல மருந்தாகும்.

      தேவையானப் பொருட்கள்:
      • தூதுவளை  - 30 இலைகள்
      • மிளகு    - 1 தேக்கரண்டி
      • சீரகம்    -  1 தேக்கரண்டி
      • பூண்டு - 5 பல்கள்
      • மிளகாய் வற்றல்   - 3
      • கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
      • கறிவேப்பிலை  - ஒரு கொத்து 
      • புளி    - பெரிய நெல்லிக்காய் அளவு
      • தக்காளி  - 1(தேவைப்பட்டால்)
      • உப்பு - தேவையான அளவு
      • கடுகு - 1/2 தேக்கரண்டி
      • மஞ்சள் தூள்   - சிறிதளவு
      • பெருங்காயம்  - சிறிதளவு      
      தூதுவளை ரசம் செய்முறை:
      • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு, பூண்டு, தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும், பின் இதனை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
      • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் அரைத்த தூதுவளை விழுதை சேர்த்து வதக்கவும்.
      • பின்பு புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
      • ரசம் கொதித்தவுடன் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.


      தூதுவளை துவையல்:
      • ஒரு கடாய்யில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் மிளகாய் வற்றல், கொத்தமல்லி, உளுந்து, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.
      • பின் நன்கு சுத்தம் செய்த தூதுளை இலைகள் சேர்த்து வதக்கவும்.
      • இதனை அரைத்து சூடான சாதத்துடன், தூதுவளை துவையல் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிலாம்.

      தூதுவளையைப் பயன்படுத்தி தோசை, அடை தோசை செய்யலாம்.


           "நலமுடன் வாழ்வோம்; 
        தமிழ் போல் வளர்வோம்."

      சளி, இருமல் போக்கும் கற்பூரவள்ளி இலை பயன்கள் மற்றும் கற்பூரவள்ளி இலை தேநீர்

               கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட, புதராக வளரக் கூடிய தாவரமாகும். இதன் இலைகள் தடிமனாகவும், மெது மெதுப்பாகவும் இருக்கும். கற்பூரவள்ளி இலைகள் கசப்பு சுவையும், காரதன்மையும், வாசனையும் கொண்ட ஒரு மூலிகை செடியாகும். பெரும்பாலும் வீடுகளில் இச்செடி வளர்க்கப்படுகிறது.


            கற்பூரவள்ளி இலையில் கற்பூரவள்ளி வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் கால்சியம்,  மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற தாதுச்சத்துக்களும், ஒமேகா-6 (omega-6 fatty acids)போன்றவையும் அடங்கியுள்ளன.
              
      கற்பூரவள்ளி இலையின் பயன்கள்:
      • கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி, சாறெடுத்து, சிறிதளவு தேன் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்துவர சளி, இருமல், மழைக்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் போன்றவை குணமாகும்.
      • கற்பூரவள்ளி இலைச் சாறு காய்ச்சலைத் தணிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
      • கற்பூரவள்ளி இலைகளை கழுவி, குடிநீரில் போட்டு, கொதிக்கவிடவும், சாறு நன்றாக இறங்கியவுடன் வடிகட்டி, வெது வெதுப்பான சூட்டில் இந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்துவர நெஞ்சுசளி, இருமல் குணமாகும்.
      • கற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவது நல்லது.
      • இரத்தில் உள்ள கொழுப்பு சத்து அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
      • குழந்தைகளுக்கு அஜீரணத்தால் ஏற்படும் வாந்தி, செரிமானமின்மை போக்க, கற்பூரவள்ளி இலைகளை சாறெடுத்துக் கொடுக்கலாம்.
      • 5 மில்லி லிட்டர் அளவு கற்பூரவள்ளி இலைகளை சாறெடுத்துக் கொடுத்துவர குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் நீங்கும்.
      • நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழல் அடைப்பு நீங்க, கற்பூரவள்ளி இலைகளை நிழலில் உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து, 100மிலி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கற்பூரவள்ளி இலைப் பொடியை சேர்த்து கொதிக்க வைத்து 50மிலி அளவு சுண்ட காய்ச்சி, சிறிதளவு பனங்கருப்பட்டி கலந்து அருந்தலாம்.


      கற்பூரவள்ளி இலை தேநீர்:
      •  கற்பூரவள்ளி இலையுடன், துளசி, தூதுவளை, வல்லாரை, சுக்கு, மிளகு  போன்றவற்றை சம அளவு எடுத்து காய வைத்து பொடி செய்து,  100மிலி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி இந்தப் பொடியை சேர்த்து கொதிக்க வைத்து 50மிலி அளவு சுண்ட காய்ச்சி, சிறிதளவு பனங்கருப்பட்டி கலந்து, தேநீராக தயாரித்து அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சுவாசப் பிரச்சனைகள் நீங்கும்.

           "நலமுடன் வாழ்வோம்; 
        தமிழ் போல் வளர்வோம்."
        

      வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

                     நமது பாரம்பரியக் கலாச்சாரத்தில் வெற்றிலையின் பங்கு முக்கியமான ஒன்றாகும். விருந்தோம்பல் நிகழ்வுகளில் இறுதியாக வெற்றிலை உண்ணும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் பலகாலமாக பின்பற்றப்படுகிறது. வழிபாட்டு முறைகளில் வெற்றிலை மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

                    வெற்றிலையில் வைட்டமின் 'சி' அதிகளவில் காணப்படுகிறது. மேலும் தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், கரோட்டின் போன்றவைகளும் அடங்கியுள்ளன. வெற்றிலையில் கால்சியம் சத்து பெருமளவில் காணப்படுகிறது. 

                  வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால், தற்காலத்தில் மக்களிடம் இதன் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வில்லை. மேலும், வெற்றிலை சாப்பிடுவதென்பது தவறான பழக்கமாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால், இதனால் வாய்வழி புற்றுநோய் ஏற்படும் என்ற கருத்தேக் காரணமாகும். பொதுவாக வெற்றிலை சாப்பிடுவதால் வாய்வழி புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதனுடன் சேர்த்து உண்ணப்படும் பாக்கு, சுண்ணாம்பு,  புகையிலைப் போன்றவற்றால்தான் வாய்வழி புற்றுநோய் ஏற்படுகிறது.

      வெற்றிலையின் மருத்துவப் பயன்கள்:
      • வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. வெட்டுகாயங்கள், சிராய்ப்புகள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு, வெற்றிலைகளை நன்றாக அரைத்து, காயங்கள் மீது பற்றுப்போட்டால் அவை விரைவில் குணமாகும்.
      • வெற்றிலையின் மீது கடுகு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயைத் தடவி, அகல்விளக்கு ஏற்றி, எண்ணெய் தடவிய வெற்றிலையை விளக்கில் வாட்டி,  வாட்டின  வெற்றிலையை இளஞ்சூட்டில் மார்பில் வைக்கும் போது நெஞ்சு சளி கரைந்து வெளியேறும்.
      • வெற்றிலை சாப்பிடுவதனால் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம். வெற்றிலைகளை கசக்கி இரவு முழுவதும் குடிநீரில் போட்டுவைத்து, காலை எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவர மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். 
      • நல்ல, திருப்திகரமான உணவு உண்டபின் வெற்றிலைப்பாக்கு மெல்லும் பழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. வெற்றிலை சாப்பிடுவதால், அதிலுள்ள இயற்கை அமிலங்கள் உணவு செரிமானத்திற்கும், ஊட்டச்சத்துகளை பெறுவதற்கும் பெரிதும் உதவுகிறது.
      • இரண்டு வெற்றிலையுடன், 5 மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் எடை குறையும்.




           "நலமுடன் வாழ்வோம்; 
        தமிழ் போல் வளர்வோம்."

      மூலிகை தேநீரும் மற்றும் அதன் நன்மைகளும்

                  இன்றைய இயந்திர வாழ்வில் நமது ஆரோக்கியத்தைக் காப்பது அவசியமான ஒன்றாகும். நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பல சமூக தொற்றுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
      இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இயற்கையைப் பேணுவதுதான் சிறந்த வழி.
      அத்தகைய இயற்கை நமக்கு ஏராளமான மூலிகைகளை கொடையாக அளித்துள்ளது.
      இந்த மூலிகைகளில் சிலவற்றைப் பயன்படுத்தி மூலிகை தேநீர் தயாரிக்கும் முறையை இந்த வலைப்பதிவில் காண்போம்.

      மூலிகை தேநீர் தயாரிக்கத் தேவையானவை:
      • சுக்கு
      • மிளகு
      • திப்பிலி
      • அதிமதுரம்
      • நன்னாரி
      • சித்தரத்தை
      • ஓமம்
      • கருஞ்சீரகம்
      • ஏலக்காய்
      • கொத்தமல்லி (விதைகள்)
      • இலவங்கம்
      • ஆவாரம்பூ
      • நாட்டு ரோஜா மொக்கு (இதழ்கள்)

      மூலிகை தேநீர் பொடி தயாரிக்கும் முறை:
      • மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நன்றாக காய வைத்து உலர்த்தி பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


      மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை:
      • ஒரு டம்ளர் தண்ணீரில் (200மிலி), 1/2 தே.கரண்டி இந்த மூலிகை தேநீர் பொடி மற்றும் பனங்கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கொதிக்கவிடவும்

      • கொதித்தப்பின் அதனை வடிகட்டி அருந்தலாம்.


      மூலிகை தேநீர் நன்மைகள்:
      • உடல் வலி , நெஞ்சு சளி, இருமல், தும்மல் போன்றவைக் குறைய உதவுகிறது. 
      • உடலில் தேக்கமான கழிவுகளை நீக்க, கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
      • நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது.
      • புத்துணர்வும், சுறுசுறுப்பும் தருகிறது.

           "நலமுடன் வாழ்வோம்; 
        தமிழ் போல் வளர்வோம்."




      செம்பருத்திப் பூவின் பயன்கள் மற்றும் தேநீர்(Tea)

                 செம்பருத்தி, அதிகளவில் மருத்துவ குணங்கள்  நிறைந்த ஒரு அதிசய குறுந்தாவரம் ஆகும். 

      ஓரிதழ் செம்பருத்திப் பூ


      மருத்துவப் பயன்கள்:
      • செம்பருத்திப் பூ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
      • உயர் இரத்தழுத்தத்தை (High BP) குறைக்கிறது.
      • இரத்தத்தை சுத்திகரித்து, தேவையற்ற கழிவுகளை  வெளியேற்ற துணைபுரிகிறது.
      • வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் உள்ளவர்கள் , தினமும் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
      • பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பானப் பிரச்சனைகளில் தீர்வுக் காண, செம்பருத்திப் பூ ஒரு சிறந்த மருந்தாகும்.
      • செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து, மோரில் கலந்துக் குடித்துவர, கருப்பை தொடர்பான நோய்கள் குணமாகும். 
      • செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி, காய வைத்து பொடி செய்து, கசாயமாகவோ அல்லது தேநீராகவோ குடித்துவர மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, அதிக இரத்தப்போக்கு போன்ற உபாதைகள் குறையும்.
          காய்ந்த செம்பருத்திப் பூக்கள் 

      • தலைமுடி அடர்த்தியாக வளரவும், பொடுகு,  தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.
      செம்பருத்திப் பூ தேநீர்:
      • செம்பருத்திப் பூவில் மகரந்தம் மற்றும் காம்பு பகுதியை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
      செம்பருத்திப் பூக்கள் 

      • ஒரு டம்ளர் தண்ணீரில், சிறிதளவு நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி மற்றும் சிறிதளவு ஏலக்காய்த் தூள் சேர்த்து  கொதிக்கவிட வேண்டும்.

      • பூவின் இதழ்களை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட வேண்டும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தலாம்.
      செம்பருத்திப் பூ தேநீர்

      • தேவைப்பட்டால்  சிறிதளவு எலுமிச்சை  சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
      • தொடர்ந்து செம்பருத்திப் பூ தேநீரை  எடுத்துக்கொண்டால், நல்லப் பலனைக் காணலாம்.
      குறிப்பு:
      • 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.
      • கர்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் ஊட்டும் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

           "நலமுடன் வாழ்வோம்; 
        தமிழ் போல் வளர்வோம்."


      சீயக்காய் பொடி

      சீயக்காய் பொடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

      தேவையானப் பொருள்கள்:

      1. சீயக்காய் - 1 கிலோகிராம்

      2. பாசிப்பயறு   - 200 கிராம்

      3. வெந்தயம்    - 200 கிராம்

      4. காய்ந்த செம்பருத்தி பூக்கள் - 200 கிராம்                                                          
      5. காய்ந்த மருதாணி இலை - 200 கிராம்                                                               
      6. காய்ந்த கறிவேப்பிலை இலை -   200 கிராம்    
                                                  
      7. பூந்திக்கொட்டை   - 200 கிராம்

      8. வெட்டிவேர்     - 200 கிராம்

      9. மகிழம்பூ          - 200 கிராம்

      10. ஆவாரம் பூ   - 200 கிராம்

      11. பூலாங்கிழங்கு       - 200 கிராம்

      12. காய்ந்த நெல்லிக்காய் -200 கிராம்     
                                       
      செய்முறை:
      • சீயக்காய், பூந்திக்கொட்டை, வெட்டிவேர், மகிழம்பூ, ஆவாரம் பூ, பூலாங்கிழங்கு இவையனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
      • பூந்திக்கொட்டையில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும். 
      • இவற்றையெல்லாம் வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும்.
      • அனைத்துப் பொருள்களையும் மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
      பயன்படுத்தும் முறை:
      • தலைக்கு குளிக்கும் போது இந்த சீயக்காய் பொடியை தண்ணீரிலோ அல்லது சாதம் வடிக்கும் கஞ்சியிலோ கலந்து தேய்த்துவர தலைமுடி அடர்த்தியாக, நீளமாக வளரவும், மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்கவும் பயன்படுகிறது.
      • உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.

           "நலமுடன் வாழ்வோம்; 
        தமிழ் போல் வளர்வோம்."