சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் கருப்பட்டி... கருப்பட்டியின் பயன்கள் அறிவோம்!!

     நம் தமிழ்நாட்டின் மாநில மரம் "பனை மரம்" என்பது நாம் அறிந்த ஒன்றே.... பனை மரத்திற்கும், நம் தமிழர் வாழ்வியலுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. சங்க கால நூல்களான தொல்காப்பியம்; சிலப்பதிகாரம்; திருக்குறள் போன்ற நூல்களில் பனை மரத்தின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் பல, பனை ஓலைச்சுவடிகள் மூலமாகவே நமக்கு கிடைத்தப் பொக்கிஷங்கள் ஆகும். 

வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில், நன்கு வறட்சி தாங்கி மிக உயரமாக சுமார் 30 மீட்டர் வரை வளரகூடிய புல்லினத்தை சேர்ந்த தாவரமாகும். இளம் பனை மரங்கள் 'வடலி' என்று அழைக்கப்படுகிறது. நன்றாக முதிர்ச்சியடைந்த பனை மரமாக வளர 15 ஆண்டுகள் வரையாகும் என கருதப்படுகிறது. பனை மரத்தின் உச்சியில் விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். மரத்தின் இடைப்பட்டப் பகுதியில் வேறெந்த கிளைகளும் கிடையாது.

    பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருட்களை நமக்குத் தருகிறது. பனைமரத்தின் பூம்பாளையிலிருந்து எடுக்கப்படும் பதநீர், முதன்மையான உணவுப் பொருளாகும். பதநீரை மூலப்பொருளாகக் கொண்டு கருப்பட்டி என்கிற பனை வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனங்கூழ் என பல்வேறு உணவுப் பொருளாக வடிவம் பெறுகிறது. மேலும் நுங்கு, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு ஆகியன கிடைக்கின்றது.

பனையோலைப் பொருள்கள், மரப்பொருட்கள், தூரிகைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை பனைமரத்தின் மூலம் தயாரிக்கப்படும் உணவிலிப் பொருட்களாகும்.

இந்த வலைப்பதிவில் பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் "கருப்பட்டி" பற்றி தெரிந்துகொள்ளலாம். 

பனைமரத்திலிருந்துப் பெறப்படும் பதநீரை சேகரித்து, காய்ச்சுவதன் மூலமாக கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. ஒரு பனைமரத்திலிருந்துப் பெறப்படும் பதநீரிலிருந்து சுமாராக 24 கிலோ பனை வெல்லம் தயாரிக்கலாம். கருப்பட்டிக்கென தனிச்சுவை, மணம், மருத்துவ குணம் உள்ளது. கருப்பட்டியை, பனை வெல்லம்; கருப்புக்கட்டி; பனைஅட்டு; பானாட்டு என்றும் சொல்வார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனைமரங்கள் மூலமாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி,  ஆனி போன்ற மாதங்களில் பதநீர் அதிகமாக கிடைக்கும் காலங்களில் கருப்பட்டி அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. மற்ற சமயங்களில் கருப்பட்டி உற்பத்தி குறைவாக காணப்படும். இதனால் வியாபார சந்தையில் கருப்பட்டி விலை கூடுதலாக இருக்கும். மேலும் போலி கருப்பட்டிகளின் விற்பனையும் அமோகமாக காணப்படுகின்றது. கருப்பட்டியின் மணத்தின் மூலம் போலியானவை எது? உண்மையான கருப்பட்டி எது? என அறியலாம்.

உண்மையான கருப்பட்டி ஒரு டம்ளர் நீரில் கரைய ஒன்றரை மணி நேரமாகும். ஆனால் சர்க்கரைப்பாகு கலந்த போலி கருப்பட்டி அரைமணி நேரத்தில் கரைந்துவிடும்.


கருப்பட்டியின் பயன்கள்:

  • கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
  • உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, இருதய பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.
  • பற்களும், எலும்பும் வலுப்பெற கருப்பட்டி சிறந்தது.
  • சீரகத்தை வறுத்து பொடித்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசியை தூண்டும்.
  • கருப்பட்டியுடன் சிறிதளவு ஓமத்தை சேர்த்து சாப்பிடுவதால் வாயு தொல்லை நீங்கும்.
  • சுக்கு; மிளகு; திப்பிலி கலந்த சுக்கு கருப்பட்டி நமது உடலுக்கு உகந்தது. நாள்பட்ட நெஞ்சுசளிக்கு சிறந்த மருந்து.
  • பருவம் அடைந்த பெண் குழந்தைகளுக்கு, கருப்பட்டி சேர்த்த உளுந்தங்கஞ்சி செய்து கொடுப்பதால், அவர்களின் இடுப்பு எலும்பு வலுப்பெறும். மேலும் கருப்பையும் வலுவடையும்.
  • கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், அதன் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
  • உணவு சாப்பிட்ட பின் சிறிதளவு கருப்பட்டித் துண்டை சாப்பிட்டால், செரிமான கோளாறுகள் நீங்கும்.
  • வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக நாம் கருப்பட்டியை பயன்படுத்துவதனால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.


"நலமுடன் வாழ்வோம்;  
தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment