மூட்டுவலி நீக்கும் முடக்கறுத்தான் கீரை(முடக்கற்றான் கீரை) மற்றும் முடக்கறுத்தான் கீரையின் பயன்கள்

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்    கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு  முடக்கற்றான் தனை மொழி."

                       -- சித்தர் பாடல்


அன்றே சித்தர்கள் முடக்கறுத்தான் கீரையின் பயனைப் பற்றி தன் பாடல் வரிகளின் வழியாக, இந்த உலகிற்கு கூறியுள்ளார்கள்.






ஏறு கொடி வகையை சார்ந்தது  இந்த முடக்கறுத்தான் கீரை. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதினால், இந்த மூலிகை முடக்கறுத்தான் கீரை எனப் பெயர் பெற்றது. தற்போதோ! காலப்போக்கில் பேச்சு வழக்கில் மருவி முடக்கத்தான் கீரை என மாறிற்று....

பொதுவாக கிராமப்புறங்களில் மழைக்காலங்களில் மிக எளிதாக கிடைக்கும் கீரை வகை. முடக்கறுத்தான் கீரை ஏராளமான மருத்துக் குணங்களைக் கொண்டது. 






இன்றைய நவீன இயந்திர உலகில், வேலைப்பளு; நேரமின்மை போன்ற பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளினால், சிறுநீர் கழிப்பதற்குக்கூட நேரமில்லாமல், சிறுநீர் வெளியேற்றுவதை நீண்ட நேரம் அடக்கிக்கொள்கிறோம். இவ்வாறு நாம் செய்வதனால், நாம் நம் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். இதனால் சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட வேண்டிய யூரிக் ஆசிட் வெளியேற இயலாமல், உடலின் பிற பகுதிகளுக்கு செல்கிறது. இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ்( Uric acid crystals)  மூட்டுகளில் படிந்துவிடுகிறது. இவ்வாறு பல வருடங்களாக படிந்து தங்கிவிடுகிறது. இதனால் இளம் வயதிலேயே மூட்டு, இடுப்பு, பாதம்  போன்றப் பகுதிகளில் அதிக வலி ஏற்பட்டு  ஆர்த்தரிட்டிஸ் (Arthritis) எனும் மூட்டுவலி நோயின் ஆரம்ப நிலையாகிறது.

முடக்கறுத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் தன்மைக் கொண்டது. 

முடக்கறுத்தான் கீரையை நம் அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் எடுத்துக்கொள்ளும் போது, மூட்டுவலி; கீல்வாதம்; கீல் பிடிப்பு; கால்களை நீட்ட, மடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.


முடக்கறுத்தான் கீரையிலுள்ள சத்துக்கள்:

முடக்கறுத்தான் கீரையில் நார்ச்சத்து,  கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம்,  புரதம் போன்ற பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியவை. மேலும் முடக்கறுத்தான் கீரை ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் (Antioxidants) உள்ளது.





முடக்கறுத்தான் கீரை உணவு வகைகள்:

முடக்கறுத்தான் கீரை தோசை; முடக்கறுத்தான் கீரை சூப்; முடக்கறுத்தான் கீரைப் பொறியல்; முடக்கறுத்தான் கீரை துவையல் போன்றவற்றை,  முடக்கறுத்தான் கீரையைப் பயன்படுத்தி செய்யலாம்.


முடக்கறுத்தான் கீரைப் பயன்கள்:

  • முடக்கறுத்தான் கீரையை விளக்கெண்ணெய்யில் வதக்கி, அந்த எண்ணெய்யை மூட்டுவலிக்கு தடவி கொள்ளலாம்.
  • மலச்சிக்கல், மூல நோய், வாய்வு பிரச்சனைப் போன்றவைகளுக்கு முடக்கறுத்தான் கீரை சிறந்தது.
  • மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கும் முடக்கறுத்தான் கீரை நல்லது.
  • முதுகெலும்பு தேய்மானம்,  மூட்டு தேய்மானம்,  மூட்டுவலி போன்ற தொந்தரவு உள்ளவர்கள் முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்த, இக்கீரையை நன்றாக அரைத்து, தலை முழுவதும் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் பிறகு, தலைமுடியை அலசவும்.


    "நலமுடன் வாழ்வோம்; 

  தமிழ் போல் வளர்வோம்."



No comments:

Post a Comment