வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

               நமது பாரம்பரியக் கலாச்சாரத்தில் வெற்றிலையின் பங்கு முக்கியமான ஒன்றாகும். விருந்தோம்பல் நிகழ்வுகளில் இறுதியாக வெற்றிலை உண்ணும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் பலகாலமாக பின்பற்றப்படுகிறது. வழிபாட்டு முறைகளில் வெற்றிலை மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

              வெற்றிலையில் வைட்டமின் 'சி' அதிகளவில் காணப்படுகிறது. மேலும் தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், கரோட்டின் போன்றவைகளும் அடங்கியுள்ளன. வெற்றிலையில் கால்சியம் சத்து பெருமளவில் காணப்படுகிறது. 

            வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால், தற்காலத்தில் மக்களிடம் இதன் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வில்லை. மேலும், வெற்றிலை சாப்பிடுவதென்பது தவறான பழக்கமாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால், இதனால் வாய்வழி புற்றுநோய் ஏற்படும் என்ற கருத்தேக் காரணமாகும். பொதுவாக வெற்றிலை சாப்பிடுவதால் வாய்வழி புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதனுடன் சேர்த்து உண்ணப்படும் பாக்கு, சுண்ணாம்பு,  புகையிலைப் போன்றவற்றால்தான் வாய்வழி புற்றுநோய் ஏற்படுகிறது.

வெற்றிலையின் மருத்துவப் பயன்கள்:
  • வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. வெட்டுகாயங்கள், சிராய்ப்புகள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு, வெற்றிலைகளை நன்றாக அரைத்து, காயங்கள் மீது பற்றுப்போட்டால் அவை விரைவில் குணமாகும்.
  • வெற்றிலையின் மீது கடுகு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயைத் தடவி, அகல்விளக்கு ஏற்றி, எண்ணெய் தடவிய வெற்றிலையை விளக்கில் வாட்டி,  வாட்டின  வெற்றிலையை இளஞ்சூட்டில் மார்பில் வைக்கும் போது நெஞ்சு சளி கரைந்து வெளியேறும்.
  • வெற்றிலை சாப்பிடுவதனால் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம். வெற்றிலைகளை கசக்கி இரவு முழுவதும் குடிநீரில் போட்டுவைத்து, காலை எழுந்து வெறும் வயிற்றில் குடித்துவர மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். 
  • நல்ல, திருப்திகரமான உணவு உண்டபின் வெற்றிலைப்பாக்கு மெல்லும் பழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. வெற்றிலை சாப்பிடுவதால், அதிலுள்ள இயற்கை அமிலங்கள் உணவு செரிமானத்திற்கும், ஊட்டச்சத்துகளை பெறுவதற்கும் பெரிதும் உதவுகிறது.
  • இரண்டு வெற்றிலையுடன், 5 மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் எடை குறையும்.




     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment