உடல் பலம் பெற உதவும் உளுந்தின் நன்மைகள் மற்றும் உளுந்து கஞ்சி செய்முறை

         இன்றைய நவீன உலகில் வாழ்க்கைத் தேவைகளுக்காக, சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள இயலாமலும், ஓய்வில்லாமலும் நாள்தோறும் இயந்திரம் போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்மையோ, நம் குழந்தைகளையோ கவனித்துக்கொள்ள முடியாமல் இயந்திர வாழ்வில் சிக்கி தவித்து, பணம் சம்பாதிப்பதோடு, நோய்களையும் சம்பாதித்துக் கொள்கிறோம். 

          சிறிதுநேரம் வேலை செய்தால்கூட சோர்ந்துவிடுகிறோம். "நமது ஆரோக்கியம் நமது உணவில்", ஆதலால் நாம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று. பல ஊட்டச்சத்துகள் நிறைந்த பயறு வகைகள், பருப்பு வகைகள், தானியங்கள் என ஏராளமானவை நம் மண்ணில் விளைகின்றன. இந்த வலைப்பதிவில், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதில் உளுந்து பருப்பு அவசியமான ஒன்று என்பதை தெரிந்துகொள்ளலாம். 

         வெள்ளை உளுந்தைக் காட்டிலும், கறுப்பு உளுந்தில் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.

           
உளுந்திலுள்ள சத்துக்கள்:
  • கார்போஹைட்ரேட்
  • கொழுப்பு
  • புரதம்
  • வைட்டமின் பி(B)
  • ஃபோலிக் அமிலம்
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • பொட்டாசியம் 
  • இரும்புச் சத்து

உணவில் உளுந்து சேர்த்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள்:
  • உளுந்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், உணவு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • உடல் வலுப்பெற, மெலிந்த உடலைப் பருக்க உளுந்து ஒரு சிறந்த உணவுப்பொருள்.
  • பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட, அடிக்கடி உணவில்  உளுந்து சேர்த்துக்கொள்வது  நல்லது. ஏனென்றால், இதில் உள்ள சத்துக்கள் அவர்களின் இடுப்பு பகுதி வலுப்பெற உதவுகிறது. உளுந்து களி, உளுந்து கஞ்சி, உளுந்துச்சோறு, வடை போன்றவை செய்து தரலாம்.
  • கர்ப்பிணி பெண்கள், தங்களது உணவில் உளுந்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்வதன் மூலம் , இரத்ததில் ஹீமோகுளோப்பின் (haemoglobin) அளவை அதிகரிக்கலாம்.
  • எலும்புகள் வலுப்பெறவும்,உடல் குளிர்ச்சிக்கும் உதவுகிறது.
  • அதிக உடல் சோர்வு, தசை பலவீனம், மூட்டு வலி உள்ளவர்களுக்கு உளுந்து கஞ்சி ஓர் நல் உணவாகும்.

உளுந்து கஞ்சி செய்முறை:

தேவையானப் பொருட்கள்:
  • வெள்ளை அல்லது கறுப்பு உளுந்து -1கப்
  • வெல்லம்     - 3/4 கப்
  • ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
  • தேங்காய்ப் பால்   - 1/2 கப்
  • தேங்காய்தத் துருவல் - 1/4 கப்
செய்முறை:
  • உளுந்தை நன்றாக நீரில் சுத்தம் செய்து, நீருற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த உளுந்தை நன்கு மைப் போல அரைத்து,  அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி, மிதமானத் தீயில் காய்ச்சவும்.( சிறிதளவு குடிநீர் அல்லது உளுந்து ஊற வைத்த நீர் சேர்த்துக்கொள்ளவும்).
  • உளுந்தின் பச்சை வாசனை போகும் வரை இடைவிடாமல் கிளற வேண்டும்.
  • பிறகு தேங்காய்ப் பால் சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். 
  • ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக தேங்காய்தத் துருவல் சேர்க்க வேண்டும்.
  • இப்போது சூடான,  சுவையான,  ஆரோக்கியமான உளுந்து கஞ்சி தயார்.
  • அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

குறிப்பு:
  • உளுந்தை வறுத்து பொடி செய்து, தேவையான போது உளுந்து கஞ்சி தயாரித்துக்கொள்ளலாம்.

     "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."

No comments:

Post a Comment